Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இன அழித்தலுக்கு நீதி கேட்டு கோவையில் திரள்வோம்: செந்தமிழன் சீமான் அழைக்கிறார்.

 இலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போர் முடிக்கப்பட்ட நாள் மே 18. மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட நியாயமற்ற அந்த போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் மக்களின் உறவுகளுக்கு இதுவரை நியாயம் கிட்டவில்லை.


அங்கு நடந்தது திட்டமிட்ட தமிழினப் படுகொலைதான் என்பதை நிரூபிக்கும் சான்றுகளும், புகைப்படங்கள், அருகில் இருந்து பதிவு செய்யப்பட்ட காண்பொலிக்காட்சிகள், செயற்கைக்கோள் புகைப்படங்கள் என்று பலவும் சானல் 4 உள்ளிட்ட பல ஊடங்கங்களில் வெளிவந்தும் இன்று வரை உலகில் ஒரு நாடு கூட அது இனப் படுகொலைதான் என்று கூறவில்லை. எல்லோரும் போர்க் குற்றம் நடந்துள்ளது, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது என்றுதான் கூறுகின்றனரே தவிர, ஐ.நா.வின் இன அழித்தல் குற்றமும் தண்டனையும் என்கிற பிரகடனத்தின்படி, அங்கு இன அழித்தல் நடந்துள்ளது என்று கூறவில்லை. அதனை நிரூபிக்க சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை நடத்துவதற்கு ஐ.நா.வும் எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழினப் படுகொலை நடந்த முடிந்த மூன்றாவது ஆண்டு நினைவு நாளான மே 18ஆம் நாளன்று, தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரி கோவையில் நாம் தமிழர் கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறது. இலங்கையில் நமது சொந்தங்கள் எதிர்கொண்ட கொடுமையான அந்தப் போரை இங்கிருந்த அரசுகளும், கட்சிகளும் தடுத்து நிறுத்தத் தவறியதால் ஏற்பட்ட இரணத்தில் பிறந்தது நாம் தமிழர் கட்சி. அதனால் நமது கட்சியின் தொடக்கத்தையும் 2010ஆம் ஆண்டு மே 18ஆம் நாளில் வைத்தோம். தமிழினத்தின் விடுதலை, உரிமை மீட்பு ஆகியவற்றை முன்னெடுக்க உருவான தமிழரின் அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த இரண்டாண்டுக் காலத்தில் இனத்தின் விடுதலைக்கும், உரிமைகளுக்கும் என்னெற்ற போராட்டங்களை நடத்தியுள்ள நாம் தமிழர் கட்சி, தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, அவர்களின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பெற்ற கட்சியாகவும் வளர்ந்துள்ளது.

ஆயினும், இனத்தின் விடுதலையை நோக்கிய நமது போராட்டங்கள் நாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை. நாம் கெட்கும் நியாயத்திற்கும் உலக நாடுகளின் மனித உரிமை ரீதியிலான முன்னெடுப்புகளுக்கும் இடையே பெரிய இடைவெளியுள்ளது. நம் இனத்தின் விடுதலை என்பது இன்றைக்கு சர்வதேச அரங்கில் இராஜதந்திர வழியில் நமது மக்களால் முன்னெடுக்கப்படுகிறது. அதில் நாம் தமிழர் கட்சியின் பங்கு அளப்பரியது. நம் இனத்தின் விடுதலை எனும் இலக்கை எட்ட இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியதுள்ளது. அதற்கு இனத்தின் ஒற்றுமையும், ஒன்றுபட்ட செயலாற்றலும் மிகவும் அவசியமானதாகும்.

இன்றைக்கு போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம் பெயரச் செய்யப்பட்ட நமது சொந்தங்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்படாமல் சொந்த மண்ணிலேயே அநாதைகளாக, நடை பிணங்களாக இருந்து வருகின்றனர். சிங்கள பெளத்த இனவெறி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அவர்கள் சந்தித்துவரும் இன்னல்கள் சொல்லி மாளாதவை. அவர்களின் நிலையறியச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு, ராஜபக்சவிடம் பரிசுகளைப் பெற்றுக்கொண்டு அரசியல் தீர்வு பற்றிப் பேசுகிறது. நமது இனத்தின் நீண்ட நெடிய தியாகப் போராட்டத்தின் இலக்கான விடுதலை என்பதை அம்மக்களே விரும்பவில்லை என்று அங்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜூம், டி.கே.ரங்கராஜனும் ஊடகங்களிடம் பேசி திசை திருப்புகின்றனர். இப்படிப்பட்ட இனத் துரோக சூழலில்தான் இன்றளவும் தமிழினத்தின் தலைவிதி சுழன்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றியமைக்கவே, இனத்தின் திரட்சியே விடுதலை எனும் இலக்கை நோக்கி நாம் நகர்ந்துக்கொண்டிருக்கிறோம். அது நமக்கு தேவையான ஆற்றலைத் தரும்.

இனத்தின் வலிமையை உறுதிப்படுத்த வாருங்கள் கோவையை நோக்கி, பல்லாயிரக்கணக்கில் திரண்டு இனத்தின் எழுச்சியை உலகிற்கு பறைசாற்றுவோம். மக்களின் எழுச்சியே மாற்றத்திற்கான அரசியல் புரட்சி என்பதை நிரூபிப்போம். மே 18 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்திலுள்ள பெரியார் சிலையருகே கூடி, அங்கிருந்து பேரணியாய் புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இனத்தின் மீட்சிக்கான நடவடிக்கைத் தீர்மானங்களை நிறைவேற்றுவோம். விழ விழ எழுவோம், விழ விழ எழுவோம், எம்மை இன விடுதலையை வெல்ல விழ விழ எழுவோம்.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. இலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடத்தி முடித்த இனப் படுகொலைப் போர் முடிக்கப்பட்ட நாள் மே 18. மூன்று ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட நியாயமற்ற அந்த போரில் படுகொலை செய்யப்பட்ட ஒன்றே முக்கால் இலட்சம் மக்களின் உறவுகளுக்கு இதுவரை நியாயம் கிட்டவில்லை.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement