Monday, October 15, 2012

ஆர்ப்பரிக்கும் தமிழ் மக்களும் அடக்க முயலும் சிங்களமும்.

தாம் பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில் தாம் வாழ நினைப்பது தவறா? தான் பிறந்த மண்ணில் தமது சந்ததிகள் தழைக்க வேண்டும் என்ற அவாவில் என்ன தவறு இருக்கின்றது?

திட்டமிட்ட ரீதியில் பறிக்கப்பட்ட தமது நிலத்தினை மீட்பதற்காக தாயகப் பிரதேசத்தில் மிக அமைதியான முறையில் பல்வேறு போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் யாழ். நகரில் தொடங்கிய போராட்டம் வலி. வடக்கு, திருமுறிகண்டி, நெல்லியடி, முல்லைத்தீவு என நீண்டு விரிந்து சென்றுள்ளது. இன்னும் செல்லப் போகின்றது.

தாம் பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில் தாம் வாழ நினைப்பது தவறா? தான் பிறந்த மண்ணில் தமது சந்ததிகள் தழைக்க வேண்டும் என்ற அவாவில் என்ன தவறு இருக்கின்றது என்ற கேள்வியை சிங்கள அரசிடம் தமிழ் மக்கள் முன்வைக்கின்றனர்.

அந்த வகையில் அண்மைக் காலமாக நில மீட்ப்புப் போராட்டத்தை தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றிணைந்து அகிம்சை வழியில் தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதனை சிங்கள மேலாதிக்கவாத அரசு அடக்க நினைக்கிறது.

தமது உரிமைகளை பாதுகாப்பதற்காக பங்குபற்ற சென்ற மக்களை மிரட்டுவதும், அவர்கள் மீது கழிவெண்ணை ஊற்றுவதும், புலிக் கொடி பிடிப்பதும், போராட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்களுடைய வாகனங்களைத் தாக்குவதும், அவர்களுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதுமாக இந்த இன்வெறி அரசின் கொடூரங்கள் நீண்டு விரிந்து செல்கின்றன அது மட்டுமல்லாமல் கொடூரங்களின் வடிவங்களும் நாளுக்கு நாள் புதுப்பொலிவு அடைகின்றன.

அதன் ஒரு வடிவமே கடந்த 21ம் நாள், முல்லைத்தீவில் தமது நிலங்களை விட்டு சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோசத்துடன் ஒன்று கூடிய மக்களை புதிய வடிவில் முற்றுகை இட்டனர் இனவாதிகள் கழிவெண்ணைக் கலாச்சாரம் மறுவி விலங்குக் கழிவு வீசப்பட்ட அவலம்.

அதனையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் கொண்ட சிங்கள புலனாய்வாளர்களும் அதனோடு இயங்கும் ஒட்டுக் குழுக்களும் போராட்டத்தில் பங்குபற்றி விட்டு சென்ற அரசியல் தலைவர்களின் வாகனங்கள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதன் அடுத்த கட்டமாக நல்லூர் பிரதேச சபைத் தலைவரை நேற்றைய தினம் இனம் தெரியாத நபர்களினால் என்ற போர்வையில் கடுமையாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணி ஒன்றிணை இராணுவத்தினர் பலவந்தமாக பறித்தமையினை எதிர்ந்து நீதிமன்றம் வரை சென்றதன் காரணமாக இவர் தாக்கப்பட்டுள்ளமை மிகத் தெளிவாக புலப்படுகிறது.

இவ்வாறு வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் எங்கெல்லாம் தம் உரிமைகளை கோரி அகிம்சை வழியில் போராடுகின்றனரோ அங்கெல்லாம் அடக்குமுறைகளும், வன்முறைகளும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் அவர்கள் எமது மக்களுக்கு ஒரு செய்தியினைக் கூறுவது தெட்டத் தெளிவாக புலப்படுகிறது. அதாவது இது சிங்கள பெளத்த நாடு இங்கு பெரும்பாண்மையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம். ஆனால் தமிழ் மக்கள் ஈடுபட முடியாது அவ்வாறு ஈடுபட்டால் இவ்வாறுதான் நடக்கும் என்று கூற வருகின்றார்கள்.

எனினும் எம் மக்களும் அரசுக்கு ஓர் ஆணித்தரமான செய்தியை  தமது அகிம்சை போராட்டங்கள் மூலம் தெளிவுபடுத்த முனைகின்றனர்.

அதாவது எமது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய எம் இனம்  தமது இருப்பிடத்திற்கான அகிம்சை போராட்டத்தை ஒரு போதும் கைவிடோம். என்பதே அனைத்து தமிழ் மக்களினதும் ஒருமித்த கூற்றாகும்.

எமது இனத்தின் குரலை அடக்கும் இந்த இனவாத அரசு வரலாறு கற்றுத் தந்த பாடத்தினை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது ஏனெனில் ஆரம்ப காலத்தில் இவ்வாறு தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டமையால் தான் தமிழர்களின் அறவழிப் போராட்டம் ஆயுத போராட்டமாக மாறியது என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மீது சிங்கள அரசு மீண்டும் மீண்டும் பிரயோகிக்கும் இந்த அடக்குமுறைகள் தமிழ் மக்களிடையே அரசின் மீது நம்பிக்கை அற்றதன்மையையும் விரக்தியையும் ஏற்படுத்தி வீறு கொண்ட இன்னொரு போராட்டத்திற்கு வழி அவ்வாறு வீறு கொண்டெழும் போராட்டம் தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

 www.eelavenkai.blogspot.com