Wednesday, May 30, 2012

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஊடகத்தணிக்கை! சீமான் தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு!!

தமிழகத்தில் மீண்டும் செந்தமிழன் சீமான் தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருவதைப் பார்க்கின்றபோது அறிவிக்கப்படாத ஊடகத்தணிக்கை அமுலில் உள்ளதாகவே எண்ணத் தோன்றுகின்றது.


முன்னர் கருணாநிதியின் ஆட்சியில் தமிழ்த்தேசியத் தளத்தில் முள்ளிவாய்க்காலில் தொப்புள்கொடி உறவுகளை மொத்தமாக பறிகொடுத்த துயரத்தின் உச்சத்தில் நின்று  வீராவேசத்துடன் களமாடப் புறப்பட்ட செந்தமிழன் சீமானிற்கு இதேபோன்ற ஊடக இருட்டடிப்பு இடம்பெற்றிருந்தது.

முன்னால் முதல்வர் கருணாநிதியின் நேரடி எச்சரிக்கையாக தமிழகத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் நாளிதழ்கள் வார இதழ்கள் பருவ இதழ்கள் என எதிலும் சீமான் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடாது என்ற அழுத்தத்தின் பின்னணியில் சீமான் தொடர்பான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருந்தது.

தற்போதும் அது போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக கருதத்தோன்றுமளவிற்கு சீமான் தொடர்பான செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டுவருகின்றது. குறிப்பாக அண்மையில் முள்ளிவாய்க்கால் பேரணர்த்தம் நிகழ்ந்து மூன்றாவது ஆண்டு நிறைவு நினைவேந்தலும் நாம் தமிழர் கட்சியின் மூன்றாவது ஆண்டு தொடக்கத்தையும் முன்னிட்டு கோவையில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டம் தொடர்பாக இதுநாள்வரை எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஏன் பெட்டிச்செய்திகூட வரவில்லை.

கோவையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் வன்னியில் இருந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் வந்து சிறப்பித்து உரையாற்றியிருந்தார். அதைவிட பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த சிரோன்மணி அகாலி தள் கட்சியின் பொதுச் செயலாளர் சிம்ரத்ஜித் சிங் மான் அவர்களும் அவரது கட்சியைச் சேர்ந்த இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் வருகைதந்து உரையாற்றியிருந்ததுடன் கடைசிவரை இருந்து பங்கேற்றிருந்தார்கள்.

பொதுக்கூட்டம் தொடர்பாகவோ அல்லது இந்திய தேசிய அரசில் சார்ந்தவர்கள் தமிழர்களது உணர்வெழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டது குறித்தோ வன்னியில் அழிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து வந்து நிகழ்விற்கே அர்த்தம் சேர்த்த சிறிதரன் எம்.பி.யினுடைய வருகைகுறித்தோ எதுவித செய்தியும் வரவில்லை.

இதில் என்ன வேடிக்கை என்றால் மாநாடு குறித்து நாம்தமிழர் கட்சியினரால் வழங்கப்பட்ட விளம்பரத்தை தமிழகத்தில் வெளிவரும் வாரமிருமுறை இதழ்களான் ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போட்டர் ஆகியவற்றில் பின் அட்டையில் வர்ணத்தில் வெளியிட்ட இவர்கள் கூட இதுவரை எந்தவித செய்தியும் போடவில்லை.

பணம் கொடுத்தால் விளம்பரத்தை போட்ட இவர்கள் மாநாட்டின் செய்தியை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வது இவர்களிற்கு பின்னணியில் வலுவான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவே நம்பத்தோன்றுகின்றது.

ஆட்சியில் உள்ளவர்களிற்கு வாக்காலத்து வாங்குவதும் பணம் என்றால் கண்டதையும் பிரசுரிப்பதும் தரம்கெட்ட செய்திகளை பின்தொடர்ந்து விறுவிறுப்பாக தொடராக வெளியிடுவது நடிகைகளின் பாவாடைக்குள்ளே சென்று ஆராச்சி செய்து அதை கிசு கிசு என்று படிப்பவர்களை கிச்சுக்கிச்சு மூட்டி காசுபார்ப்பது இவைதானே தமிழ்நாட்டு ஊடக தர்மம்.

இதனை கர்மசிரத்தையாக செய்பவர்களிடம் போய் இனமானம் தமிழ்ப் பற்று தமிழீழ விடுதலை பற்றியெல்லாம் பேசினால் எடுபடுமா?  என்னமோ நடக்குது. அது என்னன்டுதான் புரியவில்லை. நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

தீக்குச்சியை தலைகீழாக பிடித்தாலும் நெருப்பு என்னவோ மேல்நோக்கித்தான் எரியப்போகின்றது. அடக்க அடக்கத்தான் எழுச்சியும் புரட்சியும் வெடிக்கும். நிச்சயமாக செந்தமிழன் சீமான் தலைமையில் தமிழகத்தில் இனமானப் போர் வெடிக்கத்தான் போகின்றது. அப்போது தெரியும் முன்பக்கச் செய்தியா... இருட்டடிப்பா என்று!

ஈழதேசம் இணையத்தளத்திற்காக தமிழக செய்தியாளர் குழு.

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.