Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

காவியக் கவிஞர் வாலியின் பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: நாம் தமிழர் கட்சி புகழஞ்சலி

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், சிறந்த எழுத்தாளரும்,  மக்களுக்காக பல காவியங்களை தெள்ளுத் தமிழில் தந்தவருமாகிய காவியக் கவிஞர் வாலியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி, தமிழினத்திற்கும் பேரிழப்பாகும்.


1958ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த வாலி, அரை நூற்றாண்டுக் காலத்திற்கு மேலாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மக்களிடையே பெரும் புகழ் பெற காரணமாக இருந்தது அந்த படங்களில் காவியக் கவிஞர் வாலி எழுதிய பாடல்களே. எம்.ஜி.ஆர்., சிவாஜி கோலேச்சிய ஆண்டுகளில் இருந்து இன்றைய இளம் நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வரை இவரால் எழுதப்பட்ட பாடல்கள் இளையோரை கவர்ந்தன என்றால் நிச்சயமாக காலத்தை வென்றவராக நின்கின்றார் கவிஞர் வாலி.

திரைப்படங்களையும் தாண்டி, மக்களுக்கு இவர் கவிதை கொடுத்த கொடைகள் பல. அப்படி வாலி அளித்த ஒரு மாபெரும் கொடைதான் இன்று வரை முருகன் ஆலயங்களிலும், ஆன்மிக நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ என்ற பாடலாகும். அந்த பாடலைப் பாடிய தீந்தமிழ் குரலோன் டி.எம்.எஸ்.சும் இன்று வரை தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றார். அந்த பாடலே வாலிக்கு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைக்கும் முகவரியாகவும் ஆனது.

போட்டி பொறாமைகளுக்கு அப்பாற்பட்ட சிறந்த படைபாளியாகத் திகழ்ந்தவர் காவியக் கவிஞர் வாலி. பிழைப்பிற்காகத் தமிழ் என்றில்லாமல், உண்மைத் தமிழ் உணர்வு கொண்டவராகவும் திகழ்ந்தார். தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் தாயார், தமிழ் மண்ணில் சிகிச்சை பெற வந்தபோது, அவரை விமானத்திலேயே வைத்து திருப்பிய அனுப்பிய கொடுமை பொறுக்காமல், வாலி அவர்கள் எழுதிய கவிதை உலகெங்கிலும் வாழ்ந்த தமிழர் நெஞ்சங்களுக்கு இதத்தை அளித்தது. தன்னை மறைத்துக்கொள்ளாமல் இயல்பாய், சம நோக்குக் கொண்டு வாழ்ந்தவர் இன்று நம்மிடையே இல்லையே என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. அவரின் மறைவால் துயரத்தில் உள்ள அவரது மகன் பாலாஜிக்கும், அவரது பாடலையும் இலக்கிய படைப்புகளையும் இரசித்து போற்றிவந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், காவியக் கவிஞர் வாலிக்கு தனது புகழஞ்சலியையும் நாம் தமிழர் கட்சி செலுத்துகிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Ad Code

Responsive Advertisement