Friday, January 13, 2012

தைமாத முதல்நாளே தமிழர்களின் புத்தாண்டாகும்!

தைமாத முதல்நாளே புத்தாண்டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்

 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 காட்டைத் திருத்தியே பயிருமிட்டான்-நெல்
        கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
 வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
       விளைந்திட அறுவடைப்   பொங்கலிட்டான்
 மாட்டுக்கும் பொங்கலே வைத்திடுவான்-நல்
       மனித நேயத்துக்கே வித்திடுவான்
 பாட்டுக்கே அன்னவன் உரிய வனாம்-தமிழ்ப்
       பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்கலன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்களய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்