Monday, January 16, 2012

மறக்கத் தெரிந்த மனமே...

இருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவை பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது.

"உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்'' இந்த வார்த்தையை பழமொழியாகப் பார்ப்பதைவிட இப்போதெல்லாம் உண்மையான அனுபவங்கள் எண்ணிலடங்காதளவுக்கு பெருகிவிட்டன. சமூகத்தில் முன்மாதிரியாக இருக்கின்ற சிலர் தமது சொந்த வாழ்க்கையில் பிழைவிட்டு விடுகிறார்கள் என்பதும் மற்றுமொரு அனுபவம்.

ஆனாலும் சோற்றை உண்டபின் அந்தப் பாத்திரத்துக்குள்ளளேயே.... கழிப்பது, அதற்குக் காரணம் கற்பிப்பது எவ்வளவுக்கு நீதியானது என்பது சங்கடமான விடயம்தான். இருந்த போதிலும் இலங்கையில் இது சர்வ சாதாரணமப்பா.

நாட்டுக்காகப் பாடுபட்ட மனிதர்களில் முக்கியமானவர் பொன்சேகா என்று பேசப்பட்டது. மரணத்திலிருந்து மீண்டுவந்த ஒரு செயல்வீரன் என்று கூறிப் பொறுப்பில் இருக்கும்வரை அவர் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்டார். அவரிடம் இருந்து பெற்றாக வேண்டிய அனைத்தும் நிறைவுற்றதும் இப்போது அவர் கம்பி எண்ணுகிறார். இது அரச ஒரு தனிமனிதனுக்கு இழைத்த துரோகம். அந்தத் துரோகம் பொன்சேகா குடும்பத்துடன் முடிந்துவிடலாம். அல்லது அவர் சார்ந்த சிலருக்கு, வேதனையாக இருக்கலாம். ஆனால் ஓர் இனத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கும் இழைக்கும் துரோகம். இலகுவில் மறக்க முடியாது. ஒருவருக்கு மன்னிப்பையும், தீர்ப்பையும் அவர் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாறாக வரலாறோ, பாதிக்கப்பட்ட மக்களோ இவ்வாறானவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதில்லை. துரோகம் இழைத்தவர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு பின்புலத்திலிருந்து மக்களை ஏமாற்ற முற்படுவது, ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமானது என்பது இன்றும் புரியாத விடயமாகியுள்ளது. காரணம் நாட்டினது அரசியலும், ஆட்சியும் அந்தளவுக்குச் சுயலாபமாக்கப்பட்டுள்ளன.

இந்த சுயலாப அரசியலில் இப்போது நுழைந்துள்ள மனிதன் ஓர் இனத்தின் துரோகி என வர்ணிக்கப்பட்ட, அரசின் செல்லப் பிள்ளையாகியுள்ள கருணா அம்மான். இந்தப் பெயரை யாழ்ப்பாண மக்கள் தனக்கு வைத்ததாகக் குறிப்பிடும் இவர், அதை மக்கள் கூப்பிட்டால் தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்தப் பெயரை யாழ்ப்பாண மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியினருடன் இணைந்து திறம்படச்செயற்பட்டதற்காக சூட்டவில்லை என்பதைக் கூட உணர முடியாத மனிதனாக மாறியிருக்கிறார் கருணா. இவரின் மாற்றங்கள் தொடர்கின்றன.

1997.05.13 ஜெயசிக்குறு வெற்றி

விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக 1996, 1997 காலப்பகுதிகள் காணப்பட்டன. குறிப்பாக விடுதலைப் போராட்டதில் புதிய மரபுரீதியான தாக்குதல் உத்திகளால் பலம் வாய்ந்த இலங்கை அரசபடைகள் பின்வாங்கி ஓடிய சம்வங்கள் அதிகம் இடம்பெற்றன. இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் கருணாவும் இடம்பெற்றிருந்தார். ஜெயசிக்குரு எதிர்ச்சமர் கருணாவுக்கு புதியதொரு பலத்தைத் தேடிகொடுத்திருந்தது.
 இந்த துன்பத்தின் மீட்சியாக விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ நடவடிக்கை அமைந்தது. இதற்கு வித்திட்ட பெருமை கூடுதலாக கிழக்குப் போராளிகளுக்கு உரியது. அங்கிருந்து ஆயிரம் போராளிகள் வரை வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானே தனது அணிப் போராளிகளையும் வேறு போராளிகளையும் கொண்டு படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரை வெற்றிகொள்ளக் காரணமானார்.

கருணாவின் போரிடும் ஆற்றல் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மதிப்பு மற்றும் மரியாதை ஒருவகையில் பின்வந்த காலங்களில் துரோகத்தனத்துக்குக் காரணமாகியது.
விடுதலைப் புலிகள் போரிடும் வலுவில் இலங்கை அரசுக்கு சவாலாக சம இராணுவ பலத்துடன் இருக்கின்றார்கள் என்ற செய்தி இவ்வாறான வெற்றிச்சமர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதனால் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளுடன் சமரச முயற்சியொன்றில் ஈடுபட வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அவர்கள் கொண்டுள்ள கட்டமைப்புக்களை சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.
இலங்கை அரசின் ஆசையை, அவர்களது கபடத்தனத்தை நிறைவேற்றி வைப்பதற்கு புதிய மனிதராக விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தே கருணா செயற்படத் தொடங்கினார். இது அடுத்து வந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளையும், ஒரு விடுதலை அமைப்பின் இருப்பையும் கேள்விக்குறியாக்கியது எனலாம். இந்தக் காலப்பகுதியில் தன் இனத்திற்கே கருணா இழைத்த துரோகச் சம்பவங்கள் சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான திடீர் மாறுதல்களின் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய பாரம்பரியங்களை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார் கருணா.

2006.11.27 மாவீரர்தின அறிக்கை

விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கிய கருணா மாவீரர் தினத்தையும் கொண்டாடினார். அப்போது அவர் மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் "தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொருளாதார, அபிவிருத்தியுடன் தமக்கான கலை, கலாசார, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கை கோர்ப்பது காலத்தின் கட்டாய மாகும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரம்பரியம், மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசிய இவர் இப்போது நவபாரம்பரியத்துக்குள் புகுந்துள்ள நிலையில் தனது நடனங்களை மறைக்க மக்கள் மத்தியில் தேன்றி தன்னை வேறு விதமாக அறிமுகப்படுத்த முற்படுகிறார்.

31.12.2011 நவபாரம்பரியம்
2012 புதுவருடத்தை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் இப்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சராக உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடி அசத்தினார். இது மட்டுமல்ல அண்மையில் அமைச்சர் மில்ரோய் வீட்டில் நடைபெற்ற நிகழ்விலும் கருணா கலந்துகொண்டு தனக்குரியதான நடனத்தை ஆடினார். அடிக்கடி வெளிநாடு செல்லும் போதும் இவர் தனது களிப்புக்குக் குறை வைப்பதேயில்லை. இப்போது கண்டவர்களுடனும் கட்டிப்பிடி யாட்டம் போடுகிறார் அம்மான்.

10.01.2012 பாரம்பரியம்

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் நாம் சிறு பராயத்தில் கண்ட பாரம்பரியங்கள் பழக்க வழக்கங்களைக்கூட இன்று மறக்க வைத்திருக்கிறது என மட்டக்களப்பு, சந்தி வெளியிலுள்ள வேல் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்டார்.
 முன்பெல்லாம் தென்னை வீட்டில் பாளை போட்டுவிட்டதென்றால் அதனை "ஒரு பெண் வயதுக்கு வந்த சிறப்பான தினம்'' என்று கொண்டாடுவார்கள். ஆனால் அவற்றினையெல்லாம் தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர் என்றும் அவரது உரை அமைந்திருந்தது.

கருணாவின் புதிய ஞானம் எதைச் சொல்கிறது? சுகபோகத்திற்காக ஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்த மனிதர் இன்று நியாயங்கள் பற்றியும் பாரம்பரியங்கள் பற்றியும் பேசுவது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளத் தக்கது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாது.
கருணாவின் சில குறிப்புக்கள்

*புலிகள் அமைப்பில் 1983ல் இணைவு.
*2003இல் மட்டு அம் பாறைத் தளபதி.
*2004 மார்ச்சில் பிரிவு. அதே ஆண்டில் தமிழ் மக்கள் விடு தலைப்புலிகள் அமைப்பு தோற்றம்.
*2008இல் அரசுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்.
*2009இல் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகல்.
*2010 தேசிய பட்டியல் உறுப்பினர், பிரதி அமைச்சர்.

மறுபுறத்தில் இருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது.

நடப்பவற்றையும், நடக்க இருப்பவைபற்றியும் பேசுவது கூட அர்த்தமற்ற தாகிவிடுமளவுக்கு மனிதர்களின் சஞ்சரிப்பு தோன்றியுள்ளது. எல்லாம் "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி'' கதையாகவே நிகழ்கிறது. கலிகாலத்தில் யார் என்ன  செய்து விடமுடியும்???

நன்றி:உதயன்