Saturday, January 28, 2012

அரசு கல்லூரி செவிலியர்களின் கோரிக்கை நியாயமானதே: நாம் தமிழர் கட்சி.

தமிழக அரசின் மருத்துவப் பணிகளில் தனியார் கல்லூரிகளில் படித்துத்தேர்ந்த செவிலியர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என்கிற தமிழக அரசின்
அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்து வரும் மாணவியரின் போராட்டம் நியாயமானதே

.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய குடும்பங்களில் இருந்து வரும் மகளிரே அரசு
செவிலியர் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும்
தாழ்த்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தமிழ்க்
குடும்பங்களின் பிள்ளைகள். ஆனால் தனியார் செவிலியர் கல்லூரிகளில்
படித்துவரும் மாணவிகளில் பெரும்பாலோர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டுமின்றி, ஒரளவிற்கு வசதி படைத்த குடும்பப் பின்னணியில் இருந்து படிக்க வந்தவர்களாவர். அவர்கள் படிப்பிற்கே பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து அனுமதி பெற்று படித்து வருபவர்கள்.
இப்படிப்பட்ட சூழலில், அவர்களும் அரசுப் பணிகளுக்கு தேர்வு
செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருப்பது நியாயமற்றதாகும். அதுவும் தகுதித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக நலவாழ்த்துறை அமைச்சர் விஜய் கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல.

தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களின் பிள்ளைகளே அரசு செவிலியர்
கல்லூரிகளில் படித்து வரு்கிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் தேர்வு
எழுதி, அதில் தேர்ச்சி பெற்றே செவிலியர் பணிக்குத் தகுதியுடையவர்களாகின்றனர். இந்த சூழலில் இவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வாய்ப்புகளை வழங்காமல், தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்து தேர்ந்துவரும் செவிலியர்களுக்கு இணையாக வாய்ப்பு அளிப்பது என்பதும், தேர்வு நடத்தி பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் நியாயமான நடவடிக்கையல்ல. அப்படியானால் அரசு நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் செவிலியர்களின் தகுதி ஐயத்திற்குரியதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

நமது அண்டை மாநிலங்கள் அனைத்திலும் அரசுக் கல்லூரிகளில் படித்துத்
தேர்ந்த மண்ணின் மைந்தர்களு்க்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை
அளிக்கப்படுகிற நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அந்த எண்ணம்
நடைமுறைப்படுத்தப்படுவது இல்லையே ஏன்?

எனவே தமிழக அரசுப் பணிகளில் அரசு செவிலியர் கல்லூரிகளில் படித்துத்
தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், பணிப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், பணி சேர்க்கைக்கு போட்டித் தேர்வு கூடாது என்கிற அரசு செவிலியர் கல்லூரி மாணவிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்