Sunday, January 29, 2012

புதுக்குடியிருப்பு மாணவன் எழுதிய கவிதை அப்துல் கலாமே அறிவீரோ!

அப்துல் கலாம் வருகை தமிழருக்கு
அமைதி தருக என்று கேட்கா நிலைமை
செத்துப் போய் நின்றவேளை
செவிட்டுத் தனமாய் நின்றோர்
செல்வாக்கால் இங்கு வந்து எம்மை
செவி சாய்க்க வைப்பதில் என்ன நியாயம்.

படித்து விஞ்ஞானி என்று
பலர் மதிக்கும் வகையில்
பாடுபட்டு உழைத்தாலும் தமிழர்
பார்வையில் அவரின் கண் குருடுதானே
பார்த்துக் கொண்டதும் உலகம்தானே.

பத்து பேருடன் நீவீர் கதைத்து
பாதுகாப்பு காத்திரம் என்று
பாரதத்தில் போய்ச் சொல்வீர்
பாழடைந்த தமிழர் நிலை கண்டால்
பாதுகாப்பு வெறும் ஆப்பு என்று புரிவீர்.

முயற்சியினால் நீங்கள் சாதித்தது
முற்றிலும் உண்மை
முடியாதே ஒரு  சாண்வயிறைக் கழுவ என்று
முயல்வோரிற்கு பட்டம் ஏது பதவி ஏது
முறித்தெறிந்த பட்டம்தான் முச்சை கேட்பதில்லை.

ஓட்டு வீட்டைப் பார்த்து முடிவெடுக்காதீர்கள்
ஓலைக் குடிசைகள் இல்லையென்று
ஓர் இனம் பின்னோக்கிப் போனது வரலாறு
ஒரு தலைக் காதலாய் ஓர் உள்ளம் படும் வேதனை
ஒட்டு மொத்தத் தமிழன் அகதியாய்ச் சோதனை.

தாயின் மடியில் தூங்கும் வேளை
செல்லடியில் ஏங்கும் விழிகள்
கண்டு கொள்ளவில்லையே பாரதம்
முட்களுக்குள் குருவிக் கூடாய்
முப்பது வருடமாய் நடக்குதே போராட்டம்.

பிணத்தைப் போடுவது சவக்குழி
தமிழனிற்கோ அதற்கும் இல்லை பார்விழி
மண் மிதித்து ஓடுவது வழமை
எம் தமிழன் பிணம் மிதித்து ஓடியது நிலமை
எப்போது கழியுமோ கயமை.

சத்தியமாய் நான் தப்பாகச் சொல்லவில்லை
சரித்திரத்தில் தமிழனின் தரித்திரத்தைச்
சொன்னேன் தலைகுனிந்து தமிழன் 
வாழ்கின்றானே தன்மானம்
காத்திட எழாத பெரியோரே
தமிழன் நிலையைச் சரியாகப் புரிவீர்.

ஜெயம் ஜெகன்
புதுக்குடியிருப்பு