Wednesday, July 11, 2012

மத்திய அரசின் உத்தரவுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை! என்கிறார் இயக்குனர் சீமான்!!

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை என்ற இந்திய மத்திய அரசின் உத்தரவுக்கு தாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளமை தொடர்பாகக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அண்மையில் தாம்பரம் விமானப்படை மையத்தில் பயிற்சி பெற வந்த சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை திசை திருப்பும் முயற்சியே இந்த உத்தரவு என்றும் சென்னையில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட சீமான் கூறினார்.

மேலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை இவர்கள் என்ன புதிதாகவா கைது செய்யப்போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய சீமான், இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் தாங்கள் பயப்படப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய அரசு நேற்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு குறித்த விபரங்களை, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தமிழக காவல்துறை ஆணையர் மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி பிரதி காவல்துறை ஆணையர், கியூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினர் போன்றோருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலர் தர்மேந்திர சர்மா அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழருக்கு என தாய் நாட்டை (தமிழீழம்) உருவாக்கும் நோக்கம், இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், சட்ட விரோத நடவடிக்கை வரம்புக்குள் வருகிறது.

தோல்வியடைந்த பின்னர் கூட, தனி ஈழம் என்ற கொள்கையை கைவிடாமல், ஐரோப்பாவில் நிதி திரட்டியும், பிரசார நடவடிக்கைகள் வழியாகவும், தனி ஈழம் அமைப்பதற்காக, மறைமுகமாக செயல்பட்டு வருவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அல்லது போராளிகள், சிதறிக் கிடக்கிற தீவிரவாதிகளை ஒன்று சேர்ப்பதற்கு மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பிரிவினைவாத தமிழ் பற்றார்வக் குழுவினரும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், மக்களிடையே பிரிவினைவாத போக்கினை தொடர்ந்து வளர்த்து வருவதுடன், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அடித்தளம் அமைத்து வருவதால், இந்திய ஒருமைப்பாடு சிதையும் சூழல் உள்ளது.

அதனால், பொது அமைதிக்கு தொடர் அச்சுறுத்தல், குந்தகம் விளைவிப்பதாக கருதி, சட்டவிரோதமான அமைப்பாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தலாக இருக்கிறது.

எனவே, 1967ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து,இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும், உடனடியாக செயலுக்கு வரும்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற அடிப்படையில் வழக்கமாக பிறப்பிக்கும் உத்தரவுதான் இது என்றும்,இதில் புதிதாக எதுவும் இல்லை என்றும் விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.