Saturday, October 27, 2012

எங்கே போகிறது யாழ்ப்பாணம்?

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் சரி ஆயுதப்போராட்ட இயக்கத் தலைவர்களும் சரி யாழ்ப்பாணத்திலிருந்தே உருவானார்கள். தொண்டர்கள் வன்னி, கிழக்கு என அனைத்து பாகங்களிலிருந்தும் உருவானார்கள்.

யாழ்ப்பாணம் என்பது ஈழத்தமிழர்களின் அடையாளமாகப் பேசப்படும் பிரதேசம். அதற்காக மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் குறைத்து மதிப்பிடுவதற்கு இல்லை. இருந்தபோதிலும் ஈழத்தமிழர் என்றதும் சர்வதேச அரங்கிலும் சரி உள்நாட்டிலும் சரி யாழ்ப்பாணமே அதன் அடையாளமாக முக்கியத்துவம் பெறுவதுண்டு.

அண்மையில் வடபகுதிக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கூட வெளிநாடுகளில் யாழ்ப்பாணத்தின் நிலைமை பற்றி அவதானித்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார். ஈழத்தமிழர்களின் நிலைமைகளை அறிவதற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கே சென்று வருகின்றனர். சர்வதேச இராஜதந்திரிகளின் பார்வை மட்டுமல்ல, கொழும்பின் பார்வையும் யாழ்ப்பாணத்தின் பக்கம்தான் உள்ளது.

சர்வதேச சமூகங்களிடம் மட்டுமன்றி தென்னிலங்கையில் இருக்கும் சிங்கள மக்களைப் பொறுத்த மட்டிலும் இலங்கைத் தமிழர் என்ற கோட்பாடு ஆரம்பகாலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களையே குறித்து நின்றது. சிங்கள மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில், வேலை செய்யும் இடங்களில் உள்ள தமிழர்களைக் கொண்டே இக்கருத்தினை பெற்றுக்கொண்டார்கள்.  யாழ்ப்பாணத் தமிழர்களே தென்னிலங்கையில் அரச உத்தியோகங்களில் இருந்தனர்.

இலங்கையில் தமிழர்கள் வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கை என பரந்து வாழ்ந்து வருகின்றனர். எனினும், இலங்கை மக்கள் மத்தியில் முதலாளித்துவ அரசியல் உறவுகள் அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க காலத்திலிருந்து யாழ்ப்பாண சமூகமே முழுத்தமிழ் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்வதான ஒரு தோற்றப்பாட்டினை நடைமுறையில் கொண்டிருக்கிறது எனப் பேராசிரியர் சிவத்தம்பி யாழ்ப்பாணம் என்ற தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதற்குப் பல காரணங்கள் உண்டு. கல்வி, பொருளாதாரத் துறைகளில் ஏனைய தமிழ்ப் பிரதேசங்களை விட யாழ்ப்பாணம் உயர்ந்திருந்ததும், அரசியல் தலைவர்களும் சரி விடுதலைப்போராட்ட தலைவர்களும் சரி யாழ்ப்பாண மண்ணிலிருந்தே அறியப்பட்டதும் அவற்றில் சில.

விடுதலைப்போராட்டத்தின் விளைநிலமாக, வீரத்தின் உறைவிடமாக, எதிரிக்கு விலைபோகாத, மக்கள் வாழும் பகுதியாகக்கூட ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் விளங்கி வந்திருக்கிறது.  இலங்கையிலிருந்து முதன் முதலாக வெளிநாடுகளுக்குப் பர்மா, இந்தியா ஏன் அமெரிக்கா வரை கப்பல் ஓட்டியதும் யாழ்ப்பாணத் தமிழன் என்ற பெருமை உண்டு.

சேனை, குரக்கன் பயிர்களைச் செய்து உண்டு வந்த இலங்கை மக்களுக்கு பர்மாவிலிருந்து முதன் முதலாக நெல்லைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியவர்கள் யாழ். வடமராட்சி கப்பல் ஓட்டிகள் என்பது வரலாற்றில் காணும் விடயமாகும். இலங்கையின்  பிரதான உணவாக இன்று அரிசி காணப்படுகிறது. அதனை அறிமுகப்படுத்தியதும் யாழ்ப்பாணத் தமிழன் என்ற வரலாறு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்.  இலங்கையிலேயே கல்வியில் உயர்ந்த நிலையில் யாழ்ப்பாணம் இருந்தது என்பதும் பல அறிஞர்களை உருவாக்கியது என்பதும் வரலாறு.

வன்னி, மற்றும் கிழக்கு பிரதேச மக்கள் விவசாயத்திலும் கடற்தொழிலிலும் தமது முழுக்கவனத்தை செலுத்தியிருந்த காலத்தில் கல்வியை மட்டும் நம்பியிருந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. இதன் காரணமாக சிங்கள அர_கள் தமிழர்களின் கல்வியில் அரச வேலைவாய்ப்பில் தடைக்கற்களைப் போட்டபோது அவை போராட்டமாக வெடிக்க ஆரம்பித்தன.

தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்திற்கு மூல காரணமாக இருந்த சிங்களம் மட்டும் சட்டம் வன்னி மக்களையோ மட்டக்களப்பு மக்களையோ பாதிக்கவில்லை. பாதித்தது அரச உத்தியோகத்தை நம்பி வாழ்ந்த யாழ்ப்பாண மக்களை தான். ஆனால், சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து வடக்கு, கிழக்கு அனைத்து மக்களும் தான் போராடினார்கள்.

அதுபோல ஆயுதப் போராட்டத்திற்கும் இளைஞர்களின் எழுச்சிக்கும் காரணமாக இருந்த பல்கலைக்கழக தரப்படுத்தலால் வன்னி மாணவர்களோ கிழக்கு மாணவர்களோ பாதிக்கப்படவில்லை. யாழ்ப்பாண மாணவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அதனால், உருவான ஆயுதப் போராட்டத்தில் யாழ்ப்பாண இளைஞர்கள் மட்டும் இணைந்து கொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு ஏன் மலையக இளைஞர்களும் இணைந்து கொண்டார்கள். அந்த தியாக தீயில் வெந்து போனார்கள்.

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களும் சரி ஆயுதப்போராட்ட இயக்க தலைவர்களும் சரி யாழ்ப்பாணத்திலிருந்தே உருவானார்கள். தொண்டர்கள் வன்னி, கிழக்கு என அனைத்து பாகங்களிலிருந்தும் உருவானார்கள். காலப்போக்கில் வன்னியிலும் கிழக்கிலும் உள்ள இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொள்ள 1990களின் பின் அந்த போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பெருந்தொகையான யாழ்ப்பாண இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்றார்கள்.

வன்னியிலும் கிழக்கிலும் உள்ள இளைஞர்கள் அவர்கள் வெளிநாடுகள் பற்றி சிந்திக்கவில்லை. போராட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்து செத்து மடிந்தார்கள். அகிம்சை போராட்டத்திலும் சரி ஆயுதப்போராட்டத்திலும் சரி ஆரம்ப விளைநிலமாக இருந்த யாழ்ப்பாணம் இப்போது எங்கே செல்கிறது?

ஒரு காலத்தில் கல்விமான்களையும் சட்டத்தரணிகளையும் தமது பிரதிநிதிகளாக அனுப்பிய யாழ்ப்பாணம், இன்று ஊடகவியலாளர் நிமலராஜன் உட்பட மனித உரிமை செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்த, தமிழகத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களை அல்லவா தமது பிரதிநிதியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புகிறது. 1956இல் இருந்து 1983 வரை தென்னிலங்கையிலிருந்து தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு அவர்களின் தாயகத்திற்கு அனுப்பப்பட்டபோது அதில் பெருந்தொகையாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான்.

அதன் தொடர்ச்சியாக யாழ். மண்ணிலிருந்து ஆயுதப் போராட்டமும் வெடித்தது. அந்த ஆயுதப் போராட்டத்தில் எந்தச் சம்பந்தமும் இல்லாத அப்பாவி மக்களும் இலங்கை ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்கால்வரை ஏன் அதன் பின்னரும் சிங்கள ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளை உண்மையான தன்மானம் உள்ள எந்தத் தமிழனாலும் மறக்க முடியாது.

ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள் செய்த கொடுமைகளையும் தமது உறவுகளுக்கு நடந்த கோரக்கொலைகளையும் யாழ்ப்பாணம் மறந்து விட்டதா என்ற கேள்வி இன்று எழுகிறது. மறக்கவில்லை என்றால் எப்படி சிங்கள ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாக கடந்த பொதுத்தேர்தலில் நான்கு பிரதிநிதிகளை யாழ்ப்பாணம் தெரிவு செய்தது?
கடந்த பொதுத்தேர்தல் என்பது தமிழினத்தின் பேரவலமான வன்னி அழிவு இடம்பெற்று சில காலத்தில் நடந்ததாகும்.

அத்தேர்தலில், தமிழ் மக்களைப் படுகொலை செய்த அதே சிங்கள கட்சிக்கு 47ஆயிரம் யாழ்ப்பாண வாக்காளர்கள் வாக்களித்து 3 பேரை தெரிவு செய்து தமது பிரதிநிதிகளாக அனுப்பியிருந்தார்கள்.

அதேபோன்று உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் 47ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆளும் கட்சியான சிங்களப் பேரினவாதக் கட்சிக்கு வாக்களித்தது மட்டுமன்றி 3 பிரதேச சபைகளையும் அவர்களிடம் ஒப்படைத்திருந்தார்கள். நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று பிரதேச சபைகளைச் சிங்களப் பேரினவாதக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் ஒப்படைத்திருந்தார்கள்.