Sunday, January 8, 2012

நாடு தன்னுடையது என்ற திமிரே துரியோதனன் தோற்கக்காரணம்.

பாரதப் போர் நடப்பதை தருமர் ஒருபோதும் விரும்பவில்லை. போர் நடந்தால் அதன் முடிபு அழிவாகவே இருக்கும். அழிவை ஏற்படுத்திய எவரும் நிம்மதியாக இருக்க முடியாது.
அதனால் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்க முடியுமோ அந்தளவிற்கு விட்டுக் கொடுத்து போரைத் தவிர்ப்பதே தருமரின் நோக்காக இருந்தது. எனினும் நாடு முழுவதும் தனது ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்பது துரியோதனனின் நிலைப்பாடு. பாண்டவர்கள் வாழ்வதற்குக்கூட இடம் தர முடியாது என்பது துரியோதனனின் முடிவு.

யுத்தத்தை விரும்பாத தருமர் ஐந்து வீடு தந்தால் போதும், நாங்கள் வேறெதுவும் கேட்க மாட்டோம் என்ற செய்தியை துரியோதனனுக்கு தெரியப்படுத்துகின்றார். துரியோதனனோ ஐந்து வீடும் தர முடியாது என்று அறிவிக்கின்றான். துரியோதனனோடு வாழ முடியாது என்று முடிவெடுக்கின்றார் தருமர். அதன் பின்பே போருக்கான ஆயத்தம் நடக்கின்றது. பாண்டவர்கள் போரில் வெற்றி கொள்வதற்கு காரணம் அவர்களின் வீரம் என்பதற் கப்பால், ஐந்து வீடு தந்தால் போதும் என்ற விட்டுக் கொடுப்பும்; ஈ இருக்கும் இடந்தனிலும் கொடுக்க முடியாது என்ற துரியோதனனின் திமிருமே காரணம் எனலாம். பாரதப் போர் பற்றிய வரலாற்றுப் பாடம் நமக்குக் கூறுவது என்வெனில், தமிழர்கள் தனிநாடு கேட்டார்கள்.

பேரினவாதத்தின் அடக்குமுறையில் இருந்து விடுபட்டு தாம் தம்பாட்டில் நிம்மதியாக வாழ்வதற்காக அந்தக் கோரிக்கையை விடுத்தார்கள். இலங்கை சிறிய நாடு. இவ்வாறு சிறிய நாடுகள் கூறுபட்டால்,அதுவே உலகில் எடுத்துக் காட்டாகி உலகிலுள்ள சிறிய நாடுகள் சின்னாபின்னப்பட்டு விடும் என்று உலக நாடுகள் நினைத்துக் கொள்ள, உலகமய மாதல் கொள்கையும் அதனை உசார்படுத்த, உள்நாட்டுக்குள்ளேயே உரிமைகளை வழங்கி ஒற்றுமையாக இருத்தல் என்ற கருத்து மேலோங்கியது. உலக நாடுகள் எடுத்துக்கொண்ட முடிவு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் பெருந்துயர் தருவதாகிப்போனது.

இப்போது தமிழ் மக்கள் தனிநாடு என்ற கோரிக் கையில் இருந்து எவ்வளவோ தூரம் விலகி, வடக்கு-கிழக்கு இணைந்த காணி, பொலிஸ் அதிகாரத்துடன் கூடிய மிகக் குறைந்த உரிமையைக் கேட்கின்றனர். அதாவது பாண்டவர்கள் துரியோதனனிடம் கேட்ட ஐந்து வீடு போன்றது இது. இதனையும் அரசு ஏற்க மறுக்குமாயின், உலக நாடுகள் நிச்சயம் அதனைக் கருத்தில் எடுக்கும். ஆகையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். தமிழர் தரப்பில் விட்டுக் கொடுப்பு என்பதற்கே இடமில்லை. நாம் கேட்பதைத் தர அரசு மறுக்குமாக இருந்தால் பர வாயில்லை. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி வலம்புரி.