Sunday, January 8, 2012

தமிழ்நாடு தனிநாடாக ஆகியிருக்குமேயானால் - பெரியார்

நம் தமிழ்நாடு இந்தியக்கூட்டாட்சியிலிருந்து அதாவது வடநாட்டான் ஆதிக்கத்திலிருந்து பிரிந்தால் பெரும்கேடு ஏற்பட்டுவிடும் என்றும், ஒன்று பிரிந்ததே, அதாவது முஸ்லிம்கள் வாழும் நாடு முஸ்லிம்களுக்கு என்றாகிவிட்டதே. பெரிய கேடாக இருக்கிறது என்றும் காங்கிரஸ்காரர்கள் பண்டித ஜவகர்லால் நேரு முதல் அநேகமாக எல்லா காங்கிரஸ் தலைவர்களும் கூப்பாடு போட்ட வண்ணம் இருந்தார்கள்.

ஆனால், பிரிந்தால் என்ன கேடு ஏற்படும் என்று இதுவரை குறிப்பிட்ட எவரும் எதையும் கூறவில்லை.

இந்திய யூனியன் ஏற்பட்ட நாள்முதல் இன்றுவரை தமிழ்நாடு பொருளாதார ஏற்றத்திற்கு யூனியன் இந்தியா எத்தனைகோடி ரூபாய் கைப்பொருப்பிலிருந்து செலவு செய்திருக்கிறது? அப்படி ஏதாவது இருந்தாலும் அதைத் தமிழ்நாடு இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளில் இருந்து சரிசெய்துகொள்ள முடியாதா?

உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்திய யூனியன் காரணமாக தமிழ்நாட்டைத்தான் பஞ்சாப் முதல் பம்பாய் வங்காளம் வரை உள்ள முதலைகள் தமிழ்நாட்டுக்குள் புகுந்து சிறுமீன்களை விழுங்குவதைப்போல் விழுங்கிக்கொண்டு போகின்றனவே அல்லாமல், தமிழ்நாடு பொருளாதார ஏற்றம் பெற்று இருக்கிறதென்று சொல்லமுடியுமா?

தமிழ்நாடு பிரிந்தால் அது சிறுநாடு ஆகிவிடுமே என்கிறார்கள். லட்சக்கணக்கில் உள்ள சிறுநாடான கொழும்பு, பர்மா முதலிய நாடுகளும் அய்ரோப்பாவில். ஆப்ரிக்காவில், ஆசியா மைனர் முதலியவற்றில் உள்ள சுமார் 100 நாடுகள் இன்று பொருளாதாரம் மாத்திரமல்லாமல் மற்றும் பலதுறைகளிலும் முன்னேற்றமடைந்து பயமற்று, மானத்துடன் முழு சுதந்திரமாய் வாழுகின்றன.

ஒன்றை நான் சொல்லுவேன். உறுதியுடன் சொல்வேன். வெள்ளையன் சென்றவுடன் தமிழ்நாடு தனிநாடாக ஆகியிருக்குமேயானால் முதலாவது தமிழனின் சமுதாய இழிவு ஒழிந்திருக்கும்.

இரண்டாவது, தமிழன் பகுத்தறிவின் உச்சநிலையை அடைந்து, இன்றுள்ள காட்டுமிராண்டித் தன்மையில் தன் தாய்நாட்டில் ஈனப்பிறவி மனிதனாக, கீழ்சாதியாக வயிற்றுப் பிழைப்புக்கு பதவிக்கு எதையும் விற்றுப் பிழைக்கும் ஈனத்தன்மை நல்ல அளவிற்கு மறைந்திருக்கும்.

பதவிக்காக வடநாட்டானுடையவும் பார்ப்பானுடையவும் பெருவிரலைச் சூப்பும் ஈனத்தனம் ஒழிந்திருக்கும்.

மற்றும் பிறவி உயர்வு, தாழ்வு, அயோக்கியத்தனமான 'தகுதி- திறமை' விகிதாச்சார உரிமைத்தனம், ஒரு சிறு, சின்னஞ்சிறு கூட்டத்திற்கு அபரிமிதமான, ஏகபோக உரிமை, பெரும் - மாபெரும் கூட்டத்திற்கு இழிதொழில் பிழைக்கவேண்டிய மானமற்ற தன்மை முதலில் இவை ஒழிந்திருக்கும்.

இன்று இந்திய யூனியனின் முக்கிய கொள்கைகள் என்னவென்றால், சாதி காப்பாற்றப்படவேண்டும். மதம் காப்பாற்றப்படவேண்டும். பரம்பரை அந்தஸ்து காப்பாற்றப்படவேண்டும். மேல்ஜாதியான் மேல்பதவியில் இருக்கும்படியான தன்மைகள், முறைகள், பரம்பரை பழக்கவழக்கங்கள் அழியாமல் அமலில் இருக்கவேண்டும். இவை தவிர யூனியனில் வேறு எந்த மற்ற நாடுகளில் இல்லாத சிறப்பான, குறிப்பான 'நன்மை' இருக்கின்றன?

ஒன்று சொல்வேன். யூனியனில் தமிழ்நாட்டிற்கோ, தமிழர்களுக்கோ நன்மை இருக்குமானால், யூனியன் அரசியல் இருப்பது போதாமல் பலாத்கார புணர்ச்சிக்காக தண்டிக்கும் தண்டனை காலத்தைவிட அதிக தண்டனை விதிக்கும்படியான அளவுக்கு பிரிவினை தடைச்சட்டம் விதிக்கத்துடிப்பானேன்?

- 08-06-1972 ல் விடுதலையில் பெரியார் எழுதிய தலையங்கம்.