Monday, January 23, 2012

பொன்சேகா கொல்லப்படுவார் என்று சம்பந்தனுக்கு சொன்ன பசில்!

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா படுகொலை செய்யப்படுவார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரர் பசில் ராஜபக்ஸ தெரிவித்து இருக்கின்றார்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் காதுகளுக்கு இத்தகவலை போட்டு வைத்து இருந்தார் சம்பந்தர்.

2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி சம்பந்தருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்று இருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்துப் பேசி இருந்தனர்.

மஹிந்தருக்கு போட்டியாக பொன்சேகா களத்தில் இறங்குவார் என்றும் இதற்காக முப்படைக் கூட்டுத் தளபதி பதவியை ராஜினாமா செய்வார் என்றும் சொல்லி இருக்கின்றார் சம்பந்தர்.

தேர்தல் விவகாரம் சூடு பிடிக்கின்ற நிலையில் தமிழ் கூட்டமைப்பை மஹிந்தர் பேச அழைத்து இருந்தார் என்றும் கூறி இருக்கின்றார்.

பசில் ராஜபக்ஸவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார் என்றும் பொன்சேகா கொல்லப்படுவார் என்று அச்சந்திப்பில் பசில் சொல்லி இருந்தார் என்றும் சம்பந்தன் தூதரக அதிகாரிகளுக்கு குறிப்பிட்டு இருக்கின்றார்.

தூதரகத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் எமக்குக் கிடைக்கப் பெற்று உள்ளன.