Tuesday, January 31, 2012

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்படும் தமிழ் மக்கள்! அதிர்ச்சித் தகவல்!!

இலங்கையில் நடந்து முடிந்த யுத்தம், எண்ணற்ற தமிழ் மக்களின் வாழ்வை தவிடுபொடியாக்கி விட்டதென்ற உண்மைக்கு அப்பால், யுத்தத்திற்குப் பிற்பாடுஎத்தனையோ துன்பங்களும் சோகங்களும் மறைந்திருக்கின்றன.

அந்த வகையில் நிம்மதியாக வாழ்வோம் என்று பார்த்தால் ஏதோ ஒரு பிரச்சினை ஏதோ ஒரு உருவத்தில் நிழல்போல எம்மக்களைத் துரத்துகின்றன. அவ்வாறு துரத்தப்படும் ஒரு உறவுதான் தனபாலசிங்கம் சந்திராதேவி.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இவர் யுத்தத்தால் இடம்பெயர்ந்து தற்போது கிளிநொச்சி தொண்டமான்நகரில் மீள்குடியேறியுள்ளார். ஐந்து பிள்ளைகளுக்குத் தாயான இவர் யுத்தத்தின் போது தன் 21 வயது நிரம்பிய மகளைத் தொலைத்து விட்டு இன்றும் அவரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றார்.

அந்த வேதனை போதாதென்று இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறார். அதுமட்டுமன்றி தன் கணவரையும் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைப்பதாகவும் சந்திரா தெரிவிக்கின்றார்.

தொண்டமான் நகர் மாதர் சங்கத் தலைவியான சந்திரா ஒரு மாலை வேளையில் மாதர் சங்கத்துக்கான சந்தாப் பணம் சேகரித்துக் கொண்டு வந்தார்.

அப்போது தன் சுற்றத்தாரிடம் தன் கணவனை அன்றும் வந்து எச்சரித்துவிட்டுப் போனதாக கூறிக் கொண்டு நின்றதை எம் காதுகள் செவிமடுத்தன. அதைத் தொடர்ந்தே அவரிடம் நாம் உரையாடினோம்.

அந்தக் காலத்திலை நாங்கள் வாகனம் வைத்திருந்தனாங்கள். எண்ட கணவர் சாரதியாகத்தான் இருந்தவர். இந்தக் கிராமத்து மக்களுக்கே தெரியும். அவயளோட (இயக்கம்) ஒரு தொடர்புமில்ல. ஆனா நெடுகலும் வந்து விசாரணை எண்டு எங்களைக் கஸ்ரப்படுத்துறாங்கள்.

இவரை இராணுவச் சீஐடி வந்து இவர் இயக்கத்தில இருந்தது என்று கொண்டுபோய் எல்லாம் விசாரித்தவை. நீங்கள் இயக்கத்தில இருந்த தை உறுதிப்படுத்தோணும் எண்டு சொல்லுறாங்கள். தற்செயலா இயக்கம் வந்து வாகனம் தாறீங்களோ என்று கேட்டால் இவர் கொண்டுபோவார்.

தொழில் விசயமாத்தான் இவர் போவார். அவயள் டீசல் அடித்து விடுவீனம். ஆனால் இயக்கத்தில இருக்கேல்லை. நீங்கள் செய்த எல்லாத்தையும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்றாங்க. நாங்கள் செய்யாததை எப்படி ஒப்புக்கொள்ளுறது’ என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்.

விரக்தியுடன் கலந்த வேதனை வார்த்தைகள்தான் சந்திராவிடமிருந்து வெளிப்பட்டன. அவரது மகளைப் பற்றிக் கேட்டோம்.
‘2008 ஆம் ஆண்டு அவவ இயக்கம் பிடிச்சது. இப்ப எங்கயெண்டு தெரியாமல் அலைஞ்சு கொண்டு திரியுறம்.

கொழும்பில இருந்து ஒராள் எங்களுக்கு கோல் எடுத்து எங்கட பிள்ளையிண்ட விபரம் சொல்லுறமெண்டு வரச்சொல்லி நாங்க போய் 50000 காசு குடுத்து ஏமாந்து போனம். இப்ப கடவுளிட்ட பாரத்தைப் போட்டுட்டு ஏதோ வாழுறம்.

பாலாவி கொஸ்பிற்றலில் எங்கட பிள்ளை காயப்பட்டு இருந்தது என்று ஆக்கள் சொன்னவை. ஆனால் இப்ப எங்கயெண்டு தெரியல. மற்றப் பிள்ளைகள் எல்லாரும் படிக்கிறாங்கள்’ என்றவர் தன் யுத்தக் கால அனுபவங்களையும் எம்மோடு பகிர்ந்துகொள்ளத் தவறவில்லை.

‘நாங்கள் இங்கையிருந்து போய் வட்டக்கச்சில இருந்தம். பிறகு புதுமாத்தளன் சுதந்திரபுரத்திற்குப் போய் அப்பிடியியே ரெட்பானால இருந்துட்டு கடைசியா புதுமாத்தளன் மட்டும் போய் அங்க ஒரு காணிக்குள்ள இருந்தனாங்கள்.

ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில இருந்து ஷெல் அடிக்க அடிக்க பங்கர் வெட்டி இருந்தனாங்கள். அதில இவருடைய அண்ணன் செத்திட்டார். தங்கச்சின்ர பிள்ளையும் செத்திட்டு. இவ்வளவு இழப்போடும், பசியோடயும்தான் நாங்கள் அலைஞ்சு திரிஞ்சம்.

அதுக்கையும் எங்கட மகளைத்தேடினம். எங்கயும் கிடைக்கல. பிறகு ஆமி வந்து கூப்பிட நாங்கள் சரணடைந்திட்டோம். அப்பிடியே போய் முகாமுக்குள்ள இருந்து திருப்பி மீள்குடியேற்றத்திற்கு இங்கை வந்து நாங்கள் 2010 பங்குனி மாதம் 23 ஆம் திகதி வந்தனாங்கள்.

முகாமில இருக்கேக்க அது நரகமான வாழ்க்கைதான். பேசாம மாத்தளனிலயே செத்திருக்கலாம். முகாமில எங்களுக்கு தண்ணி வசதியில்ல. றொய்லற் வசதி எல்லாம் பிரச்சினைதான்.

ஒரு தறப்பாள் ரெண்டில பதிநாலு பேர் இருந்தனாங்கள். அதோட பிள்ளைகளுக்கு வருத்தம் எல்லாம் வந்தது. ஏதோ சமாளித்துக் கொண்டு இருந்தனாங்கள்’ என்று தன் வேதனைகளை கொட்டித் தீர்த்தார்.

இப்போது உங்கள் வாழ்க்கை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்டபோது,

‘விபத்தொண்டில எண்ட கணவர்ட ஒரு கை போயிட்டு. இப்ப அவரால ரைவிங் பண்ண ஏலாது. இப்ப லீசிங்கில ஒரு லொறிய வாங்கி ரைவர் வச்சித்தான் ஓடுறம். மாசம் 38,500 கட்டணும். இதுக்குள்ள வாகனச் சிலவு, வீட்டுச் சிலவு, பிள்ளைகளின்ர படிப்புச் சிலவு என்று எங்களுக்கு அது பத்தாது.

என்ன செய்யிறது. நான் மாதர் சங்கத்தில இப்பதான் பதிவு செய்து இயங்கி அங்கத்தவர்களிட்டை சந்தாப்பணம் பெற்றுக் கொண்டு வாறன். அதை வச்சு ஏதும் லோன் கேட்டால் தருவாங்கள்.

மாதர் சங்கம் இயங்கி ஒரு வருசமாகுது. கிடைக்குற நிதிக்கு ஏற்ப நாங்கள் மானிய அடிப்படையாகவோ லோன் அடிப்படையாகவோ கஷ்ரப்பட்ட குடும்பங்களாகப் பார்த்து உதவி செய்வம். முதல்ல இந்தக் கிராமத்தில தண்ணிப் பிரச்சினை. நாங்கள் கோழியை வளர்த்தாலும் வெக்கையில செத்துப்போகும்.

ஆடு, மாடை வளர்த்தாலும் கால் ஏக்கருக்குள்ள வளர்க்கேலாது. எங்களுக்கு கிணறு இருக்கு கிணற்றுக்க தண்ணி இல்லை. அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்தக் கிராமம் இருக்கு.

வறுமைக்கோட்டுக்குக் கீழதான் எல்லாரும் இருக்கீனம். கூலி வேலைதான். 5,6 பிள்ளைகள் இருக்கும் வீட்டுக்கு அது காணுமே. வீட்டுத்திட்டம் எல்லாக் கிராமங்களுக்கும் வந்தது. எங்கட கிராமங்களுக்கு வரேல’ என்றார்.

‘இனியும் ஒரு யுத்தநிலமை வேண்டாம். நல்ல சூழ்நிலை வரோணும். முதல் இருந்தமாதிரி எங்களுக்கு ஒன்றும் நடக்காமல் பிள்ளைகள் எல்லாம் எங்களோடு சந்தோசமா இருக்கவேணும்’ என்ற சந்திராவின் முகத்தில் மீண்டும் எப்போது வந்து விசாரிப்பார்களோ என்ற பயப் பீதி.

கடந்து வந்த துயரப் பாதையை மறந்து வாழும் அம்மக்களை திரும்பவும் பயப்பீதிக்குள் உட்படுத்தாமல் அவர்களை வாழவிடலாமே.
இப்போது அவர்கள் நாட்டைக் கேட்கவில்லை. நிம்மதியான வாழ்க்கையைத்