Thursday, February 2, 2012

சுறாவை விட்டுட்டு குட்டி மீனைப் பிடிக்கும் மகா கெட்டிக்காரர்கள் இலங்கைப் பொலிஸார்.

சுறாவை விட்டு விட்டு குட்டி மீனைப் பிடிக்கும் பொலிஸ் சுறாக்களையும் திமிங்கிலங்களையும் கோட்டை விட்டு விட்டு சிறிய நெத்தலிக் குட்டிகளை மடக்கிப்பிடிப்பதில் மகா கெட்டிக்காரர்கள் இலங்கைப் பொலிஸார்.

 சுறாக்களையும் திமிங்கிலங்களையும் கோட்டை விட்டு விட்டு சிறிய நெத்தலிக் குட்டிகளை மடக்கிப்பிடிப்பதில் மகா கெட்டிக்காரர்கள் இலங்கைப் பொலிஸார். போர் முடிந்த பின் உணவு, உடை, உறைவிடம் என ஓடித்திரிந்த வட பகுதி மக்கள் இப்பொழுது மண், மணல் எனத்தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்காலிக குடிசை அமைப்பது முதல் சிறிதாக ஒரு வீடு, கழிவறை, கிணறு எதைக் கட்டிக்கொள்ள வேண்டுமானாலும் அத்தியாவசியமாகத் தேவைப்படுவது மணல். ஆனால் மணல் விற்பனைதான் இப்போது கொள்ளைலாபம் தரும் தொழில். இங்கேதான் மொத்த அநியாயமும், அட்டகாசமும் நடக்கின்றது.

கடந்த வாரம் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் லாண்ட் மாஸ்டர் ஒன்றில் மணல் கொண்டு வந்த விவசாயி ஒருவரை பொலிஸார் மடக்கிப்பிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளனர். 

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது இல்லையா? ஆனால் மணல் கடத்தும் பெருந் தலைகள் எவையும் பொலிஸாரால் கைது செய்யப்படுவதில்லை. இந்த விடயம் சம்பந்தமாகக் கிளிநொச்சி பிரதேசவாசிகள் சிலரை நேரடியாக சந்தித்து விவரம் கேட்டோம்.

அப்போது அவர்கள் கூறியவிடயங்கள் எம்மை வாய்பிளக்க வைத்து விட்டன. எல்லாவற்றையும் கூறிவிட்டு அவர்கள், "என்ன கேட்கிறீர்கள்? பொலிஸாருக்கு பெரிய சுறாக்களும், திமிங்கிலங்களும் போவது தெரியாது. ஆனால் எங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ சிறிது மண் கொண்டு வந்தால் கொலைகாரர்கள் போல் விரட்டிப் பிடிக்கின்றனர்'' என்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தினசரி நூற்றுக்கும் அதிகமான "டிப்பர்'களும், "கெண்டெய்னர்'களும் மண்ணையும், மரங்களையும் வெளிமாவட்டங்களுக்கு கடத்திச் செல்கின்றன. இவை எல்லாம் சட்டரீதியாக அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுத்தான் கொண்டு செல்லப்படுகின்றனவா? இவற்றை எல்லாம் பொலிஸார் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? என்று மக்கள் எம்மிடம் திரும்பிக் கேள்வி கேட்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக சிறிது ஊடுருவிப் பார்த்தபோது மேலும் பல தில்லுமுல்லுகள் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் அன்றாடம் இடம்பெற்று வருவதும் தெரியவந்தது.

கிளிநொச்சிவட்டக்கச்சி என்ற கிராமத்தில் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு சபை என்ற அமைப்பு செயற்படுகின்றது. இந்தச் சபை நாட்டின் அதிஉயர் பீடத்தில் இருக்கும் ஓர் அரசியல்வாதியின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கின்றது.

இந்த அமைப்பு இப்பொழுது குறித்த பிரதேசத்தில் 60 ஏக்கர் வயற் காணிகளையும் 40 ஏக்கர் மேட்டு நிலத்தையும் கையகப்படுத்தி உள்ளது. பன்னங்கண்டி என்ற இடத்தில் முன்பு புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இந்தக் காணிகள் அந்தப் பிரதேச மக்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு பல குடும்பங்கள் அங்கு நிரந்தரமாகக் குடிய மர்த்தப்பட்டிருந்தன.

விவசாயிகள் குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்தனர்.
தனியார் ஒருவருக்குச் சொந்தமான இந்தக் காணி போரின் பின் செல்வாக்கு மிக்க இளம் அரசியல்வாரிசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது.

முன்பு குத்தகை அடிப்படையில் விவசாயம் செய்து செழிப்புடன் வாழ்ந்த அந்த விவசாயிகள் இப்பொழுது தினக் கூலிக்கு வேலை செய்யும் நிலையாகி விட்டது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதோடு நின்று விடவில்லை இந்தச் சபை. இராமநாதபுரம், பன்னங்கண்டி ஆறு, கனகராயன் ஆறு ஆகிய இடங்களில் இருந்து மணலைக் கொண்டு வந்து வட்டக்கச்சி சிவிற்சென்டர் என்ற இடத்தில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளது. மணல் தேவையானவர்கள் தமது அனுமதிப்பத்திரங்களுடன் சென்று இந்த அமைப்பிடமே மணலைப் பெறவேண்டும்.

அனுமதிப்பத்திரம் இல்லாதவர்கள் இந்த அமைப்பைக் கடந்து நேரடியாகப் போய் மணல் எடுக்க முடியாது. தேவையானவர்கள் நேரடியாகப்போய் மணல் எடுத்தால் ஒரு ட்ரக்ரர் மணல் இரண்டாயிரத்தி ஐநூறு ரூபாவுக்குள் பெற முடியும். ஆனால் இந்த சபையிடம் பெறும்போது ஐயாயிரம் ரூபா செலுத்தியே பெறவேண்டும். இதனைத் தட்டிக் கேட்க ஆள் இல்லை. இவ்வாறு ஒரு முனையில் தென்பகுதியில் இருந்து வந்த இளம் அரசியல்வாரிசு மண் வியாபாரம் செய்கிறார்.

பின்னர் அந்தக் காசில் பாடசாலைப் பிள்ளைகளில் ஒரு சிலருக்கு சப்பாத்தும், கொப்பி புத்தகங்களும் வாங்கிக் கொடுத்து அரசியலும் நடத்துகிறார். மறுமுனையில் அதிஉயர் மன்றில் பிரதியாக செயற்படும் அரசுக்குத் "துணை'யாக படையாக நிற்கும். தமிழ் அரசியல்வாதி ஒருவரும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் என்ற பெயர்ப்பலகையுடன் மணல் வியாபாரம் செய்கின்றார்.

இவரது ஆதிக்கத்தின் கீழ், அக்கராயன் குளம், புதுமுறிப்பு, வன்னிக்குளம், முரசுமோட்டை, கண்டாவளை ஆகிய இடங்களில் இருந்து மணல் கொண்டுவரப்பட்டு களஞ்சியப்படுத்தப்படுகின்றது. இவரது கட்டுப்பாட்டில் 93  கிராம அபிவிருத்திச் சங்கங்கள் இயங்குகின்றன.

இந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு முந்திய காலத்தில் இருந்தே இவர் சார்ந்த அரசியல் கட்சியின் அனுசரனையுடன் ஆரம்பிக்கப்பட்டவை.

"இந்த 93 கிராம அபிவிருத்தி சங்கங்களும் மகேஸ்வரிநிதியத்தின் முகவர்களாகவே இயங்குகின்றன'' என்று அப்பிரதேச வாதிகள் கூறுகின்றனர். மேற்குறிப்பிட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்கள் தனித்தனியாக யாழ்ப்பாணத்தில் உள்ள புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பிரதி ஆணையாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்றே இந்த மணல் வியாபாரத்தை நடத்துகின்றன.

இவர்கள் ஒரு ட்ரக்ரர் மணலுக்கு 3,500 ரூபா முதல் 4,000 ரூபா வரை அறவிடுகின்றனர். ஆனால் பாவனையாளர்கள் நேரடியாகச் சென்று மணல் அள்ளினால் ட்ரக்ரர் கூலி அடங்கலாக ஆயிரத்து ஐநூறு ரூபாவுக்கு ஒரு ட்ரக்ரர் மணலைப் பெற முடியும் என்கின்றனர் பாவனையாளர்கள். மேலதிகமாகப் பெறப்படும் தொகை மகேஸ்வரி நிதியத்திற்கும், கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கும் இடையில் பங்கிட்டுக் கொள்ளப்படுகின்றன என்றும் இவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பாக பத்தரமுல்லையில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் ஆணையாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டபோது; பொது மக்கள் தமது தேவைகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களால் உறுதிப்படுத்தப்பட்ட அத்தாட்சிப் பத்திரங்களுடன் சென்று பிரதேச செயலகங்களில் மணல் பெறுவதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெறமுடியும்.

இதற்கேற்ப 1992/33 ஆம் இலக்க கனிய வளங்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை காலமும் புவிச் சரிதவியல் அளவைகள், சுரங்கங்கள் ஆணையாளருக்கு மட்டுமே இருந்த அதிகாரங்கள் பிரதேச செயலகங்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளன என விளக்கம் அளித்தார் பிரதி ஆணையாளர்.

அப்படியானால் இன்னும் வடக்கில் மட்டும் மணல் விநியோகத்தின் ஏகபோக உரிமை அரசியல்வாதிகளின் பிடிக்குள் இருப்பது ஏன்?
பிரதேச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயற்படுத்த அஞ்சுவது ஏன்? பொலிஸார் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்? இழக்க வேண்டியது எதுவுமே இல்லை என்று எல்லாவற்றையும் இழந்து விட்டு, துளிர்விட முயலும் தமிழ் மக்களை, அரசியல்வாதிகளும் தவிச்ச முயல் அடிப்பது போல் வேதனைப்படுத்துவதை நிறுத்தி அவர்களின் கண்ணீரைத் துடைக்க முன்வரவேண்டும்.