Monday, February 6, 2012

இந்தியாவின் துணையுடன் அமெரிக்காவை முறியடிப்போம்; இலங்கை நம்பிக்கை


ஜெனிவாவில் இலங்கை அரசு தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளை இந்தியாவின் துணையுடன் முறியடிக்க முடியும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


அமெரிக்க அரசு எங்கள் மீது மிகக் கடும் அழுத்தங்களை கொடுக்கிறது. ஆனால் நாங்கள் அதை சமாளித்து விடுவோம். ஏனெனில் இந்தியா எமக்கு முழுப் பக்க பலமாக இருக்கிறது'' இவ்வாறு பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக இருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கிலாரி கொழும்புக்கு அறிவித்துள்ள நிலையில் அதிகாரியின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி முடிவை அமெரிக்கா எடுப்பதற்கு முன்பாக அந்த நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் றொபேட் ஓ பிளேக் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வருவது உறுதிப்படுத்தப்படவுள்ளது. இவருடன் பொதுமக்கள் பாதுகாப்பு ஜனநாயகம் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலாளர் மேரி ஒரேரோ உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவினர் வரவுள்ளனர்.

இதற்கிடையில்  இலங்கையின் 64ஆவது சுதந்திர தினம் கடந்த சனிக்கிழமை கொலம்பிய மாவட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் றொபேட் ஓ பிளேக் உட்பட அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய றொபேட் ஓ பிளேக், இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிக்கல்லை நல்லிணக்க ஆணைக்குழு நட்டுவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கைத் தீவு அமைதியுடனும் சமத்துவத்துடனும் மீண்டௌக் கூடிய தீர்மானகரமான வழிவகைகளை நல்லிணக்க ஆணைக்குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்த இலக்குகளை இலங்கை அடைவதற்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.