Monday, October 1, 2012

போர்:இந்தியாவுக்குப் படு தோல்வி, சீனாவுக்குப் பெரு வெற்றி ,அமெரிக்காவுக்கும் தோல்வி

 அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு வீரமும் இராணுவத் திறனும் தேவையில்லை. மக்களை கொல்வதென்று முடிவு எடுக்கவல்ல கோழைத்தன மனமே அதற்குப் போதுமானது. எனவே இங்கு சிங்களம் பெற்ற வெற்றி புலிகளுக்கு எதிரான அவர்கள் கூறும் இராணுவ வியூக வெற்றியல்ல. அது மக்களைக் கொன்றுகுவித்த அவமானகரமான ஓர் இனப்படுகொலை வெற்றியாகும்.

 விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான இறுதிப் போரின் தாய் சீனா. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ வெற்றியடைந்தமைதான் இந்தப் போரில் குலவெற்றி.

போர் ஜனாதிபதித் தேர்தல் சார்ந்த அரசியலால் நிர்ணயிக்கப்பட்டது. இராணுவ அர்த்தத்தில் புலிகளின் தோல்வி கடலில் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. புலிகளின் 13 ஆயுதக் கப்பல்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதோடு புலிகள் தரையில் முடமாக்கப்பட்டுவிட்டனர். ஆனாலும் குறிப்பாக இந்திய மத்திய அரசின் பொதுத்தேர்தல் களமும், சர்வதேச ராஜதந்திர சூழலும், புலிகளின் கெட்டியான இராணுவத் திறனும், தரையில் ராஜபஷக்களுக்கு சவால் விடக்கூடிய போர்ச் சூழலை ஏற்படுத்தியிருந்தன.

ராஜபக்ஷக்கள் இதனை பின்வரும் வகைகளில் தாண்டும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலில் இராணுவ இழப்புக்களின் மத்தியில் ஸ்கந்தபுரத்தோடு எல்லையிட்டுத் தம் தாக்குதலை நிறுத்த இராணுவத்தினர் திட்டமிட்டனர். ஆனால் களநிலையில் ஏற்பட்ட சில மாற்றங்களைத் தொடர்ந்து இராணுவம் தொடர்ந்து முன்னேறுவது என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆயினும் கிளிநொச்சியைக் கைப்பற்றிக் கண்டி வீதியை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுடன், போரை நிறுத்துவதே அரசியல் ரீதியாகத் தமக்குச் சாதகமானதென பஸில் ராஜபக்ஷ ஒரு கருத்தை முன்வைத்தார் என உறுதிப்படுத்தப்படாத செய்தி உண்டு. அதாவது கண்டி வீதியைக் கைப்பற்றுவதோடு புலிகளை முடக்கி போரை நிறுத்துவது தமக்குச் சாதகமானதென பஸில் கருதினார் போலத் தெரிகிறது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவும், இராணுவத் தலைமைத் தளபதி \ரத் பொன்சேகாவும், புலிகளை அழிக்கும்வரை போரைத் தொடரவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர் எனவும் கூறப்படுகிறது.

சிங்கள அர_ இதுவரை கடைப்பிடித்து வந்த ஓர் அரசியல் இராணுவ மூலோபாயம் இப்போது ராஜபக்ஷ அரசால் மாற்றப்படும் நிலையேற்பட்டது. அதாவது இலங்கைக்கு எதிரான அம்மை நோய் போல இந்திய ஆதிக்கப் படர்ச்சி இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் அந்த அம்மைநோயை எதிர்க்கவல்ல அமைப் பாகப் பேணப்படவேண்டியவர்கள் என்ற ஒரு மூலோபாயத்தை பிரேமதாச காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு வகுத்திருந்தது.

அதாவது ஐ.தே.கவின் கொள்கையின்படி புலிகள் பலவீனப்படுத்தப்பட்டு, அதேவேளை பேணப்பட வேண்டியவர்கள். ஆனால் உலக அரங்கிலும் குறிப்பாக ஆசியாவில், சீனா தலையெடுத்து வரும் நிலையில் இந்திய ஆதிக்கத்தை இலங்கையில் பரவவிடாது தடுத்து நிறுத்தவல்ல சீனப்பெரும் சுவரை பாக்கு நீரிணையில் நிறுத்தி விடலாமென ராஜபக்ஷக்கள் கணக்குப் போட்டனர். எனவே அந்தக் காரணத்துக்காக அவர்களுக்குப் புலிகள் தேவைப்படவில்லை.

1980களில் இலங்கைக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்கா பின்வாங்கியது போன்ற சர்வதேச சூழல் தற்போது சீனாவிற்கு இல்லையென்றும், சீனா தமக்கு நிரந்தர உறுதுணையாக இருக்கக்கூடிய பலத்தை பெற்று வருவதாகவும் நம்பிய ராஜபக்ஷ அரசு புலிகளை அழிக்கும் வரை போரைத் தொடர்வது என்ற முடிவுக்கு வந்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கு முடிவு கட்ட விரும்பிய இந்திய ஆட்சியாளரின் பிரதான தேவையைப் பயன்படுத்தி சீன அரசின் உறுதியான ஆதரவுடன் போரை இறுதிவரை நடத்த ராஜபக்ஷக்கள் சித்தமாகினர். இந்திய தேர்தல் `ழலில் ஏற்பட்ட தளம்பல்களை தமது ராஜதந்திரத் திறனால் ராஜபக்ஷக்கள் கடந்தார்கள். மக்களைப் படுகொலை செய்வதன் மூலம் தம் இராணுவ முன்னேற்றத்தை அடையலானார்கள். இங்கு போர் அப்பாவி மக்களைப் படுகொலை செய்கின்ற இனப்படுகொலையின் வெற்றியாக அமைந்ததே தவிர இராணுவ வியூகத்தின் வெற்றியல்ல. அதாவது இனப்படுகொலை வியூகத்தால் வெற்றி பெற்றார்களே தவிர இராணுவ வியூகத்தால் வெற்றி பெறவில்லை.

முழு அளவில் மக்களை பெரும் படுகொலைக்கு உள்ளாக்கியமையாலும், உணவு, மருந்து விநியோகங்களை முற்றிலும் இல்லாமல் செய்தமையாலும், மக்களை நடமாட்டமின்றி சிறுபகுதிக்குள் அடைத்து சமூகச் செயற்பாட்டையும், மனித நடமாட்டத்தையும் முற்றிலும் முடமாக்கிவிட்டு அந்த மக்கள் மீது கேட்பாரின்றி வான்வழி கடல்வழி, தரைவழிகளால் குண்டுமாரி பொழிந்தமையாலும், பெரும் தமிழின அழிப்பு அரங்கேறியது; புலிகள் செயலற்று வீழ்ந்தனர்.

இதைத்தான் இன்றைய இலங்கை அரச தரப்பினர் இராணுவ வெற்றி என்று கூறுகிறார்கள். அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதற்கு வீரமும் இராணுவத் திறனும் தேவையில்லை. மக்களை கொல்வதென்று முடிவு எடுக்கவல்ல கோழைத்தன மனமே அதற்குப் போதுமானது. எனவே இங்கு சிங்களம் பெற்ற வெற்றி புலிகளுக்கு எதிரான அவர்கள் கூறும் இராணுவ வியூக வெற்றியல்ல. அது மக்களைக் கொன்றுகுவித்த அவமானகரமான ஓர் இனப்படுகொலை வெற்றியாகும்.

புலிகளை முடக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் கொள்கையே தவிர புலிகளை அழிக்க வேண்டும் என்பதல்ல. புலிகள் சவால்விட முடியாத அளவிற்கு முள்ளிவாய்க்காலுடன் முடக்கப்பட்டுவிட்டதாக நம்பிய மேற்குலகம் பெரும் தொகையில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த சூழலில் மனிதாபமான படையிறக்கலின் மூலம் ராஜபக்ஷ அரசையும், புலிகளையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்தி விடலாமென நம்பியது போல் தெரிகிறது. ஆனால் புலிகளின் தலைமைப் பீடம் அழிக்கப்படும் வரை போர் தொடரப்பட வேண்டுமென்ற இந்திய அரசின் விருப்பத்தை மேற்குலகால் தாண்ட முடியவில்லை.

அமெரிக்கப் படை இறுதி நேரத்தில் பாதுகாப்பதற்கு வரும் என்ற ஒரு தகவல் புலிகளிடம் காணப்பட்டுள்ளது. அதேவேளை போர் நிறுத்தம் கோரி புலிகள் இறுதி நாள்களில் ஒரு சீன வெளிநாட்டுத் தூதரகத்திற்கு ஊடாக சீனாவை அணுகியிருந்தனர். இரண்டு நாள் அவகாசம் கோரிய குறிப்பட்ட அந்த சீனத் தூதரகம் இறுதியில் கைவிரித்தது. எப்படியோ 140,000இற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் உடலங்களின் மீது உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தத்தம் அரசியல் இலக்குகளைக் கணக்குப் பார்த்தனர். அனைத்து வகை உள்நாட்டு, வெளிநாட்டு சர்வதேச அரசியல் சக்திகளின் தேவைகளுக்குமான அரசியல் இராணுவ பரிசோதனைப் பிராணிகளாய் (Guinea pigs) அப்பாவித் தமிழ் மக்கள் ஆக்கப்பட்டனர்.

தன் மயிர் துவாரத்திற்கூட வியர்வை படியா பெரு வெற்றியை சீனா இந்தப் போரில் அடைந்தது. தமிழர்கள் பேரழிவிற்கு உள்ளாகினர். புலிகள் களநிலை அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டனர்.

இந்தியா புலிகளை அகற்றும் விடயத்தில் வெற்றி பெற்றாலும் சீனாவிடமும், மற்றும் அந்நிய சக்திகளிடமும் இலங்கையைப் பெருமளவு பறிகொடுத்து விட்டது. இந்தியா மலையை இழந்து கைமண் பெற்றது. இதனால் கடல்வழி இந்தியாவின் பாதுகாப்பும், வளர்ச்சியும் கேள்விக்கு உள்ளாகிவிட்டன. ராஜபக்ஷக்கள் தம் பரம்பரைக்கான வெற்றியைத் தேடினர். ஆயினும் இலங்கை அரசு, தான் பிளவுண்டு நீண்ட காலத்தில் தோல்வியடைவதற்கான ஆழமான மூலக் கூறுகளைப் பெற்றுவிட்டது.

சண்முகவடிவேல்
www.eelavenkai.blogspot.com