Sunday, September 16, 2012

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பொருளாதார அடிமைத்தனத்தை திணிப்பதாகும் சீமான்

 சில்லரை வர்த்தகத்தில் 51 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற மத்திய அரசின் முடிவு, 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்திய பெருநாட்டில், பெரும்பான்மையாக வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு
உதவிவரும் 4 கோடி சில்லரை வர்த்தகர்களின் வணிக வாழ்க்கையும், எதிர்காலத்தையும் இருளடையச் செய்யும் ஒரு அபாயகரமான நடவடிக்கையாகும். மத்திய அரசின் இம்முடிவை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, கடுமையாக எதிர்க்கிறது.

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உற்பத்தியாகும் உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களை உற்பத்திகளுக்கு இப்போது கிடைப்பதை விட நல்ல விலை கிடைக்கும் என்றும், நுகர்வோருக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும் என்றும் கூறியே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இது விஷயத்தின் மீது சக்கரைத் தோய்த்து கொடுக்கும் வஞ்சகத் திட்டமாகும். நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை நல்ல விலையில் வாங்கி, நியாயமான விலைக்கு விற்கும் உன்னத நோக்கோடுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டில் முதலீடு செய்ய வருகின்றனவா? அவைகளின் நோக்கம் கொள்ளை இலாபமா?அல்லது சேவையா? யாரிடம் காது குத்துகிறது மத்திய அரசு?

வால்மார்ட், கேர்ஃபார் போன்ற பன்னாட்டு சில்லரை வர்த்தக பெரு நிறுவனங்களால், அவைகள் முதலில் காலூன்றிய அமெரிக்க நாட்டிற்குக் கூட எந்த பலனும் கிட்டவில்லை என்பதுதான் உண்மை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக இந்த நிறுவனங்கள் மிக அதிக அளவிற்கு தரமற்ற  சீனப் பொருட்களையே பெருமளவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்தன. இதனால் அமெரிக்க உள்நாட்டு உற்பத்தி குறைந்தது. அதிலும் குறிப்பாக விவசாய விளைபொருட்களை வாங்காமல் தவிர்த்தன இந்த பெரு நிறுவனங்கள். எனவே உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறுவதெல்லாம் கானல் நீர் கதையாகும்.

இந்த நிறுவனங்கள் தங்களின் சில்லரை வர்த்தக மையங்களை தொடங்கும்போது, அத்யாவசியப் பொருட்களுக்கு சந்தையில் உள்ள விலையை விட குறைந்த விலையில் விற்று, சிறு வணிக சில்லரை வர்த்தகர்களை அழித்தொழிக்கும் வணிகத் தந்திரத்தில் ஈடுபடுகின்றன. சாதாரண சில்லரை வர்த்தக கடைகளை ஒழித்துவிட்ட பிறகு, விலைகளை ஏற்றி கொள்ளை இலாபம் பார்க்கின்றன. தங்களின் வணிக தகுடுதித்தங்களுக்கு அரசு அமைப்புகள் தடையாக வராமல் பார்த்துக்கொள்ள பெரும் தொகையை இலஞ்சமாக கொடுத்து வாயடைத்துள்ளன. இப்படிப்பட்ட பெரு நிறுவனங்கள்தான் நமக்கு நியாயமான விலையில் தரமான பொருட்களை விற்கும் என்று மத்திய அரசு நம் காதில் பூ சுற்றுகிறது.

இந்த நிறுவனங்களால் வேலை வாய்ப்பு பெரும் என்று மத்திய அரசு கூறுகிறது. எப்படிப்பட்ட வேலை வாய்ப்பு? சேல்ஸ் பாய்ஸ், சேல்ஸ் கேர்ல்ள்ஸ் உருவாக்குவதற்குப் பெயர் வேலை வாய்ப்பா? அல்லது கூலிகள் உற்பத்தியா? என்று மத்திய அரசைக் கேட்கிறோம். இந்த நாட்டில் உள்ள 4 கோடி சில்லரை வர்த்தகர்களில் வாழ்க்கையை அழித்துவிட்டு, அந்தக் குடும்பங்களின் எதிர்காலத்தை இருளாக்கிவிட்டு, இளையோருக்கு கூலி வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் தரகு வேலை பார்க்கிறது மத்திய காங்கிரஸ் அரசு!

இப்படிப்பட்ட நிறுவனங்கள் வந்தால்தான், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் எளிதாக சந்தைக்கு வரும் உள்கட்டமைப்பு பெருகும் என்று இங்குள்ள பெரு நிறுவன முகவர்கள் வாதிடுவதும் எழுதுவதும் வினோதமாக உள்ளது. நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைக்கு கொண்டு வரக்கூடிய சாலைகள், போக்குவரத்து வசதிகளை உருவாக்கக் கூடிய திறன் கூட நமக்கு இல்லையா? இந்த யோக்கியதை கூட இல்லாமல் இந்த நாடு வல்லரசாக ஆகப்போகிறதா? உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை மட்டுமே ஆதாரமாக்கி 100 ராக்கெட்டுகளை ஏவிய நாட்டிற்கு உள்கட்டமைப்பு வசதியேற்படுத்த அந்நிய நாட்டு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் தேவையே? யாரை ஏமாற்றுகிறது மத்திய அரசு?

உண்மை என்னவென்றால், இந்த நாட்டிலுள்ள சில்லரை வர்த்தகத்தில் ஆண்டொன்றுக்கு 900 பில்லியன் டாலர் அளவி்ற்கு வணிகம் நடக்கிறது. இது அடுத்த 10 ஆண்டுகளில் 1,200 பில்லியன் டாலர்களாக, அதாவது 6 இலட்சம் கோடி ரூபாயாக உயரப்போகிறது! இதில் கண் வைத்துள்ள அந்நிய நாட்டு சில்லரை நிறுவனங்கள் பெருமளவிற்கு இலஞ்சம் கொடுத்து இப்படியொரு சாதகமான முடிவை பெற்றுள்ளன. வால்மார்ட் என்கிற ஒரு நிறுவனம் மட்டும், தனக்கு சாதகமான இந்த கொள்கை முடிவிற்காக இதுவரை 50 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாம். எனவே கொள்ளை இலாபம் அடிக்க அந்நிய நிறுவனங்களுக்கு வழிவிடும் புதிய காலனிய பொருளாதார ஆதிக்க திட்டம்தான் மத்திய அரசின் இந்த முடிவு.

இந்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி மிகவும் எதிர்பார்த்தார். ஏனெனில் இதனால் பலனைடையப் போவது அமெரிக்க நிறுவனங்களும், அதன் கூட்டாளி நாடுகளின் பெரு நிறுவனங்கள்தாம். தனது நாட்டின் உயர் தொழில்நுட்ப பணிகளை இந்தியாவிற்கு வழங்குவதை எதிர்க்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்தியா தனது சந்தையை தடையின்றி நிறந்துவிட வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன் பேசினார். அவருடைய பேச்சுக்கு செவிசாய்த்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுதான் சில்லரை வர்த்தகத்தில் 51 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி என்கிற முடிவாகும்!

உண்மையிலேயே இந்த நாட்டின் பெரும்பான்மை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வில் அக்கறை இருந்தால், அத்யாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தக்கூடிய டீசல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியிருக்குமா மத்திய அரசு? எனவே இந்த நாட்டை பொருளாதார ரீதியாக அடிமையாக்கும் மத்திய அரசின் இம்முடிவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழ் மக்களிடையே விழுப்புணர்வை உருவாக்கும்.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.