Thursday, November 8, 2012

விஜயகாந்திற்கு தைரியம் இருந்தால் கட்சியைவிட்டு நீக்கிப்பார்க்கட்டும்.

 தைரியம் இருந்தால் கட்சியை விட்டு நீக்கி பாருங்கள் என்று அதிருப்தி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.கள் விஜயகாந்துக்கு சவால் விடுத்துள்ளனர்.
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் கூறியதாவது; தொகுதி மக்கள் நலனுக்காக முதல்வரை சந்தித்து பேச விஜயகாந்திடம் அனுமதிகேட்டோம். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

அதையும் மீறி முதல்வர் ஜெயலலிதாவை, சந்தித்து  எங்கள் தொகுதி மக்களுக்குத் தேவையான நலத்திட்டப் பணிகளைச் செய்துதருமாறு கேட்டுள்ளோம். முதல்வரும் ஆவன  செய்வதாகக் கூறியுள்ளார்.

கட்சியை விட்டுச் செல்வதாக இருந்தால்முறைப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்று எங்களைப் பற்றி தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும் போது முறையாக சொல்லிவிட்டு அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுத்தான் வந்தார்களா? விஜயகாந்த் முகத்துக்காக தான் எங்களுக்கு மக்கள் வாக்குப் போட்டு எம்.எல்.ஏ. ஆக்கியதாக தே.மு.தி.க.வினர் கூறுகின்றனர். நாங்கள் இப்போதே ராஜிநாமா செய்யத் தயார். மற்ற தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்துவிட்டு தனியாக தேர்தலை சந்திக்கத் தயாரா?

நாங்கள் முதல்வரைச் சந்தித்த பின்பு எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது.முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் சந்தித்தது நாடகம் என்றால் நீங்கள் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருப்பது கபடநாடகம் தானே? மேலும் 10 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்வரைச் சந்திக்க காத்திருப்பதாகச் சொல்வது பற்றிய எங்களுக்குத் தெரியாது. தைரியம் இருந்தால் எங்களை கட்சியைவிட்டு விஜயகாந்த் நீக்கிப்பார்க்கட்டும்.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.