Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

முத்திரை மூலம் புலிகள் மீண்டும் உயிர்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகப் பெருமிதம் பேசிக் கொண்டிருக்கின்ற நிலையில் வெளிநாடுகளில் பிரபாகரனின் பெயரில் முத்திரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது மீண்டும் விடுதலைப் புலிகள் உயிர் பெற்றுள்ளதையே உறுதிப்படுத்தியிருக்கின்றது.
இந்த பாரதூரமான நிலைமை எங்கு சென்று முடியப் போகின்றதோ என்று தெரியவில்லை. பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க நேற்று சபையில் அச்சம் வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட சில நாடுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட முத்திரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த நாடுகள் மன்னிப்புக் கோரின. மேலும் சில நாடுகள் அரசின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தவில்லை. புலி முத்திரை வெளியிடப்பட்ட விடயம் மாத்திரமே நாம் அறியப்பட்டதாக இருக்கிறது.

எனினும் நாம்அறியப்படாத வகையில் மேலும் பல விடயங்கள் இடம்பெறுகின்றனவா என்பது தெரியாது. இந்த முத்திரை வெளியீடானது எங்கு சென்று முடியப் போகின்றது என்று தெரியாதுள்ளது. இது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்று புலி முத்திரை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய குறித்த நாடுகள் நாளை அங்கு புலிகளின் அலுவலகங்களை திறக்கவும் அனுமதி வழங்கும்.

அதன் பின்னர் இச் செயற்பாடுகளுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவே நாம் நம்பிக் கொண்டிருக்கின்றோம். எனினும் அந்த ஆபத்து முற்றாக முறியடிக்கப்பட்டு விடவில்லை என்பது முத்திரை வெளியீட்டின் மூலம் உறுதியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இவ்வாறு புலிகளின் தோற்றங்கள் இடம்பெறுவதற்கும் புலிகளின் முத்திரைகள் வெளியிடப்படுவதற்கும் எமது வெளிவிவகார அமைச்சினதும் புலனாய்வுத் துறையினதும் பலவீனமே காரணமாகும்.

தாய்லாந்தில் தான் சகல நாடுகளினதும் பயங்கரவாதிகள் ஒன்று கூடுகின்றனர். புலிகளும் அங்கு தான் கூடுகின்றனர். எனவே இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிவிவகார அமைச்சு தூங்கிக் கொண்டிருக்கக் கூடாது என்றார்.



Post a Comment

1 Comments

  1. வெளிநாடுகளில் இவ்வாறு புலிகளின் தோற்றங்கள் இடம்பெறுவதற்கும் புலிகளின் முத்திரைகள் வெளியிடப்படுவதற்கும் எமது வெளிவிவகார அமைச்சினதும் புலனாய்வுத் துறையினதும் பலவீனமே காரணமாகும்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement