Monday, May 21, 2012

இலங்கை சிறையில் உள்ளோரை விடுவிக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி கோரிக்கை.

 இலங்கையில் தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போருக்குப் பின்னால் சரணடைந்தபோது கைது செய்யப்பட்டு, கொழும்பு சிறையில் அடைக்கப்பட்ட போராளிகள் 200 பேர், தங்களை விசாரணையின்றி இரண்டரையாண்டுக் காலமாக சிறைவைத்திருப்பதை எதிர்த்து கால வரையற்ற பட்டிணிப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.


2009ஆம் ஆண்டு மே மாதம் 17, 18ஆம் தேதிகளில் சரணடைந்த தமிழ் மக்களில் பலர் போராளிகள் என்ற ஐயத்தின் காரணமாக இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொழும்பு, நீர்க்கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா, அனுராதபுரம் ஆகிய இடங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 4,000 மேற்பட்ட இவர்கள் மீது வழக்கு மட்டுமே தொடர்ந்துள்ள இலங்கை அரசு, அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல் சிறையிலேயே வைத்து சித்தரவதை செய்து வருகிறது. சட்டத்திற்குப் புறம்பாக இப்படி இரண்டரையாண்டுக் காலமாக சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி கொழும்பு ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ள 204 போராளிகள் இன்றுடன் 5 நாட்களாக பட்டிணிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் சிலரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், அவர்களின் கோரிக்கையை இலங்கை அரசு கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் சிலரின் உடல் நிலை பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விசாரணையின்றி சிறைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா.வும், உலகளாவிய அளவில் இயங்கும் அம்னஸ்டி பொது மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஐயத்தின் பேரால் நீண்ட காலம் சிறைப்படுத்தப்பட்டுள்ளதால் தங்களின் குடு்ம்பங்கள் வாழ வழியின்றி நடுத்தெருவில் நிற்கின்றன. எனவே தங்களை விடுவித்து குடும்பத்துடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரியே இந்த பட்டிணிப் போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிரான இப்படிப்பட்ட சிறைப்படுத்தலை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் சிறைபடுத்தப்படிருக்கும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும், ஐ.நா.வின் மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இலங்கையை நட்பு நாடு என்று கூறிவரும் மத்திய காங்கிரஸ் அரசு, அப்பட்டமான இந்த மனித உரிமை மீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்றும் நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்புகிறது. சட்டத்திற்குப் புறம்பாக சிறைபடுத்தப்பட்டுள்ளோர் அனைவரையும் இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கப்படவில்லையென்றால், இலங்கைத் தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.